விடுதி மேலாளர் வீட்டில் திருடியவர் கைது

விடுதி மேலாளர் வீட்டில் திருடியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 15 பவுன் நகை-வெள்ளிப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-05-20 21:28 GMT

தஞ்சாவூர்;

விடுதி மேலாளர் வீட்டில் திருடியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 15 பவுன் நகை-வெள்ளிப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருட்டு

தஞ்சை மிஷின் சர்ச் ரோடு பகுதியில் வசித்து வருபவர் கலைவாணி (வயது56). இவர் பெண்கள் விடுதியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இந்தநிலையில் இவரது வீட்டிற்குள் கடந்த 18-ந் தேதி மர்மநபர் புகுந்து 15 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்றுவிட்டார். இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் கலைவாணி புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து, நகைகளை பறிமுதல் செய்யும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் ஏட்டுகள் கோதண்டபாணி, இளவரசன், போலீஸ்காரர்கள் குமரன், அருண்மொழி வர்மன், இஸ்மாயில், ரகு ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பு கேமரா

மேலும் திருட்டு போன வீடு இருக்கும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் தனிப்படையினர் பார்வையிட்டனர். அப்போது வீடு புகுந்து நகைகளை திருடி சென்ற நபரின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த உருவத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நபர் தஞ்சை சி.ஆர்.சி. டெப்போ அருகே நின்று கொண்டிருந்தார்.அவரை பார்த்த தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தஞ்சை வடக்குவாசல் அன்னை சத்யா நகர் சுண்ணாம்புகாலவாய் தெருவை சேர்ந்த மணி (வயது40) என்பதும், வீடு புகுந்து நகைகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர்.

கைது

இதையடுத்து மணியிடம் இருந்து போலீசார் 15 பவுன் நகைகளையும், வெள்ளிப்பொருட்களையும் பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டில் ஈடுபட்ட நபரை விரைவாக கைது செய்த தனிப்படையினரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்