கொடுத்த பணத்தை திரும்பி கேட்டவரை மண்வெட்டியால் வெட்டிக்கொல்ல முயற்சி
கொடுத்த பணத்தை திரும்பி கேட்டவரை மண்வெட்டியால் வெட்டிக்கொல்ல முயற்சி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணி கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 37). டிரைவர். இவரது மனைவி அக்கம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் திருமங்கலம் அருகே டி.வலையங்குளம் கிராமத்தில் வசித்து வரும் கட்டிட தொழிலாளியான பாலமுருகன் ரூ.14,500 கடனாக தனது அக்காள் அக்கம்மாளிடம் வாங்கி உள்ளார். கடனாக வாங்கிய பணத்தை வெகு நாட்களாகியும் திரும்ப தராததால் ராமர், பாலமுருகனிடம் பணத்தை திரும்ப தருமாறு கேட்டு அடிக்கடி திட்டியுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் ராமரும், பாலமுருகனும் சின்ன உலகாணி அருகே மரத்தடியில் அமர்ந்து மது அருந்தினர். மது போதையில் பாலமுருகன், எனது அக்காவிடம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்க நீ யார் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ராமர் பணத்தை கேட்டதை அவமானமாக கருதிய பாலமுருகன் மண்வெட்டியை எடுத்து அவரை வெட்டினார். இதில் ராமருக்கு வலது கையில் வெட்டு விழுந்தது. மேலும் மண்வெட்டியால் ராமரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் வழியில் அலறி துடித்த ராமரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வரவே பாலமுருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ராமர் வெட்டு காயத்துடன் இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பாலமுருகனை தேடி வருகின்றனர்.