'செந்தில் பாலாஜியை உணவு, மாத்திரைகளை சாப்பிடக் கூட அனுமதிக்கவில்லை' - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

பா.ஜ.க.வின் துணை அமைப்பாக அமலாக்கத்துறை மாறிவிட்டது என்று கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

Update: 2023-06-14 10:12 GMT

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இந்தியாவில் பா.ஜ.க. தலைமையில் ஒரு காட்டாட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. ஒருவர் மீது புகார் இருக்கும் போது, அவரை விசாரிப்பதற்கான சட்ட நெறிமுறைகள் இருக்கின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு வர வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் கொடுத்திருக்கலாம். அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.


ஆனால் அவரை விசாரணைக்கு அழைக்காமல், நேற்று மாலையில் இருந்து அவரது வீட்டிற்குள்ளேயே ஒரு கைதியைப் போல் அடைத்து வைத்து, உணவையும், மாத்திரைகளையும் சாப்பிட அனுமதிக்காமல், அவரை சந்திக்கச் சென்ற குடும்ப உறுப்பினர்களையும் பார்க்க விடாமல், நள்ளிரவு 3 மணிக்கு மேல் கைது செய்து இன்று மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் அமலாக்கத்துறை, இந்திய அரசின் அமலாக்கத்துறையாக இல்லாமல் பா.ஜ.க.வின் துணை அமைப்பாக மாறிவிட்டது என்பதைத் தான் இந்த விசாரணையும், கைதும் எடுத்துக் காட்டுகிறது. தலைமைச் செயலகத்திற்குச் சென்று அமலாக்கத்துறை விசாரணை நடத்திய போது முதல்-அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தலைமைச் செயலாளருக்கும், காவல்துறைக்கும் கூட தகவல் தெரிவிக்காமல் துணை ராணுவப் படை என்றால் இப்படித் தான் நடந்து கொள்வோம் என்று காட்டி எதிர்கட்சிகளை மிரட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள்."

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்