வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு
நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தனியாக வசித்து வருகிறார்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி கொட்டவூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களின் மகள்கள் பாரதி (17), அம்ருதா (14) இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் பர்கூரில் வாடகை வீட்டில் மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். இதன் காரணமாக சீனிவாசன் தாயார் சாலம்மாள் (75) மட்டும் மல்லப்பள்ளி கொட்டவூர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
நகை, பணம் திருட்டு
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி சாலம்மாள் குனிச்சி பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் முன்பக்க கதவின் கேட் மற்றும் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் நகை மற்றும் ரூ. 70 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.
வீடு திரும்பிய சாலம்மாள் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அறிந்து தனது மகன் சீனிவாசனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் விரைந்து வந்து பீரோ மற்றும் வீட்டை சோதனை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்ளை பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மேலும் இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.