தெர்மாகோல் மிதவையில் கணவாய் மீன்பிடித்து வரும் மீனவர்கள்
விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாததால் ராமேசுவரத்தில் தெர்மாகோல் மிதவையில் அமர்ந்து மீனவர்கள் கணவாய் மீன்களை பிடித்து வருகின்றனர்.
ராமேசுவரம்
விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாததால் ராமேசுவரத்தில் தெர்மாகோல் மிதவையில் அமர்ந்து மீனவர்கள் கணவாய் மீன்களை பிடித்து வருகின்றனர்.
தடைக்காலம்
ராமநாதபுரம் மாவட்டத்திலேயே அதிகமான படகுகளை கொண்ட ஊர் என்றால் அது ராமேசுவரம்தான். மீன்பிடி தொழிலை நம்பி மட்டும் ராமேசுவரம் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 300-க்கும் அதிகமான நாட்டுப் படகுகளும் உள்ளன. ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரையிலும் 61 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக உள்ளதால் இந்த சீசனில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் தற்போது தடைகால சீசன் நடந்து வருவதை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மற்றும் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
ராமேசுவரம் பகுதியிலும் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டுப் படகு, பைபர் படகு, சிறிய வத்தை உள்ளிட்டவைகளில் மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
கணவாய் மீன்கள்
இதை தவிர தெர்மாகோலால் செய்யப்பட்ட மிதவைகளிலும் மீனவர்கள் கணவாய் மீன் பிடிக்கவும் சென்று வருகின்றனர்.
விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாததால் ராமேசுவரத்தில் தெர்மாகோலால் செய்யப்பட்ட மிதவையில் அமர்ந்து துடுப்பு போட்டு மீனவர்கள் பிடித்து வரும் கணவாய் மீனின் விலையும் தற்போது உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கணவாய் மீன் வியாபாரி சேகர் கூறும்போது, தடை காலத்திற்கு முன்பு வரை ஒரு கிலோ கணவாய் மீன் ரூ.200-க்கு மட்டுமே விலை போனது. தற்போது ஒரு கிலோ கணவாய் மீன் ரூ.300-ல் இருந்து 350 வரை விலை போகின்றது. ஆனால் இந்த 2 மாத சீசனில் மட்டும் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாது என்பதால் கணவாய் மீனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் கிராக்கியும் ஏற்படும். அதனால் நாட்டுப் படகு மற்றும் தெர்மாகோல் மிதவையில் அமர்ந்து மீனவர்கள் பிடித்து வரும் கணவாய் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
விலை உயர்வு
கணவாய் மீன் ஓரளவு தற்போது வரத்தும் உள்ளது. விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தொடங்கிய பின்னர் கணவாய் மீன்களின் விலை மீண்டும் குறைந்து விடும். அதுபோல் இந்த மீன்கள் பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள கம்பெனிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தூத்துக்குடியில் உள்ள பெரிய மீன் கம்பெனிக்கு அனுப்பப்பட்டு வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.