தமிழகத்தில் கோடைகாலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் கோடைகாலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Update: 2023-04-16 18:33 GMT

கரூர்,

கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி வருகிறோம். இரு தினங்களுக்கு முன்பு 400 மில்லியன் யூனிட் ஒரே நாளில் மின்நுகர்வு பயன்பாடு வந்துள்ளது.ஒரு நாள் பயன்பாடாக ஏறத்தாழ 40 கோடி யூனிட்டை மக்கள் பயன்படுத்தி உள்ளனர். எந்தவித தடையும் இல்லாமல் சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. ஒருநாளில் அதிகபட்ச மின்நுகர்வு இதுதான். இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் முதலில் இருந்துதான் காற்றாலையின் உற்பத்தியை எதிர்பார்க்கிறோம்.

இந்த கோடை காலத்திற்கு மட்டும் ரூ.1,312 கோடி முதல்-அமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மின்சார வாரியத்திற்கு சேமிக்கப்பட்டு இருக்கிறது. மின்வாரியம் தொடர்பான புகார்கள் இருந்தால் மின்னகத்திற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டால் அதற்கான குறைகள் உடனுக்குடன் களையப்படும். தமிழகத்தில் இப்போது வரை சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றன.

கோடைகாலத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல், சீரான மின்வினியோகம் வழங்குவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே எந்தவித பயமும், அச்சமும் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் காரணமாக இந்த கோடைகாலத்தை சமாளிக்க கூடுதலான மின்சாரம் இருக்கிறது. எனவே மின்தேவை இன்னும் அதிகரித்தாலும் கூட அதை சமாளிப்பதற்கும் மின்சார வாரியம் தயாராக உள்ளது. அதனால் கோடைகாலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்