பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு

பிதிர்காட்டில் குப்பைகள் தீ வைத்து எரித்ததால், பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-11 22:15 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பிதிர்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதற்கிடையே வீடுகள், கடைகளில் சேகரமான குப்பைகள் கடந்த சில நாட்களாக ஊராட்சி சார்பில் சேகரிக்கப்பட வில்லை. இதனால் வீதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக உணவு தேடி தெருநாய்கள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் புகுந்து வருகின்றன. மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இந்தநிலையில் நேற்று பிதிர்காட்டில் இருந்து பாட்டவயல் செல்லும் சாலையில் முக்கட்டி பகுதியில் குப்பைகளை மூட்டையாக கட்டி குழி தோண்டி தூய்மை பணியாளர்கள் புதைத்ததாக தெரிகிறது. மேலும் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த வழியாக பஸ்களில் சென்ற பயணிகள், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த பணியை தடுத்து நிறுத்தி, போராட்டம் நடத்த முயன்றனர். தகவல் அறிந்த அம்பலமூலா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். அங்கு குப்பை கொட்ட இடம் ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்