தேவகோட்டை அருகே காலில் தகடுடன் பறந்து வந்த புறாவால் பரபரப்பு
தேவகோட்டை அருகே காலில் தகடுடன் பறந்து வந்த புறாவால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே காலில் தகடுடன் பறந்து வந்த புறாவால் பரபரப்பு ஏற்பட்டது.
பறந்து வந்த புறா
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சருகனி கிராமத்தை சேர்ந்தவர் டென்னிஸ். ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டிற்கு புறா ஒன்று வந்தது. அந்த புறாவை அவர் அங்கிருந்து விரட்டினார். இருப்பினும் அது தொடர்ந்து அவரது வீட்டிற்கே வந்தது. இதனால் புறா பசியோடு இருப்பதாக நினைத்து அதற்கு உணவு மற்றும் தண்ணீர் வைத்தார்.
அப்போது புறாவை உற்று பார்த்த போது அதன் கால்களில் சில எழுத்துக்கள் பதியப்பட்ட தகடுகள் இருப்பதை கண்டார். அதில் THRPC என எழுதப்பட்டு சில எண்களும் அந்த தகட்டில் பதியப்பட்டிருந்தன.
இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியது. அந்த புறா உளவு பார்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து யாரேனும் அனுப்பி உள்ளார்களா? அல்லது பந்தயத்தில் பறக்க விடப்பட்ட புறாவா? என்று பொதுமக்கள் பேச தொடங்கினர்.
பந்தயத்தில் பங்கேற்றது
அந்த புறாவின் காலில் இருந்த தகட்டை கழற்றி பார்த்தபோது அது பந்தயத்தில் இருந்து வந்த புறா என தெரியவந்தது. அதில் கிடைத்த தகவலின்படி தூத்துக்குடி கிளப்பிற்கு போன் செய்து அதன் தலைவர் வினோத்திடம் கேட்டபோது, அவர் இது பந்தய புறா என்றும் பொன்ராஜ் என்பவருக்கு சொந்தமானது என்றும் கூறினார். இதை அடுத்து பொன்ராஜ் ராமநாதபுரத்தில் உள்ள தனது நண்பர் மூலம் நேற்று புறாவை பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து பொன்ராஜ் நிருபரிடம் கூறும்ேபாது, "கடந்த 11-ந் தேதி ஆந்திர மாநிலத்திலிருந்து 600 மைல் தூர இலக்கில் இந்த புறா பறக்க விடப்பட்டது. இன்னும் பல புறாக்கள் வந்து சேரவில்லை. அதிக வெயிலில் பறந்து வந்ததால் சோர்வாகி சருகனியில் இறங்கி உள்ளது. இந்த தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பாக அதை வைத்திருக்கும்படி கூறி, அதை எனது நண்பர் மூலம் பெற்றுக்கொண்டேன்" என்று கூறினார்.