அயனாவரத்தில் குப்பைத்தொட்டியில் துப்பாக்கி கிடந்ததால் பரபரப்பு

அயனாவரத்தில் குப்பை தொட்டியில் துப்பாக்கி, தோட்டாக்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-20 22:46 GMT

திரு.வி.க. நகர்,

சென்னை அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலை பாளையக்காரர் தெரு அருகே உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் நேற்று முன்தினம் துப்புரவு பணியாளர் சாமி கண்ணன் மற்றும் அவரது மகன் மோசஸ் ஈடுபட்டு வந்தனர். அப்போது குப்பைகளுடன் ஒரு பாலிதீன் கவரில் 1 துப்பாக்கி, 7 சிறிய வகை தோட்டா, 8 டபுள் கன் எனப்படும் ரவை தோட்டா இருப்பது தெரிந்தது.

மேலும் எழும்பூர் ஹால்ஸ் சாலையை சேர்ந்த மல்லிகா ஜான்சன் மற்றும் மோசஸ் ஜான்சன் என்ற பெயரில் 2 பாஸ்போர்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவற்றை அயனாவரம் போலீசில் அவர்கள் ஒப்படைத்தனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் ஜெனிஷா ஜான்சன் (வயது 33) என்பவர் அதை குப்பையில் போட்டுச் சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் ஜெனிஷா ஜான்சன் லேசாக மன நலம் பாதிக்கப்பட்டதும், இவரது தந்தை மோசஸ் ஜான்சன் மற்றும் தாய் மல்லிகா ஜான்சன் ஆகியோர் பிரபல அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டர்களாக வேலை செய்ததும் தெரிந்தது.

பரபரப்பு

தற்போது 2 பேரும் இறந்ததால் சொத்துகள் அனைத்தையும் இழந்த ஜெனிஷா ஜான்சன், நண்பா்கள் சிலரின் உதவியால் தனியாக பாளையக்காரர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். வீட்டை சுத்தம் செய்த போது தன்னிடம் இருந்த பழைய பொருட்களை குப்பைத் தொட்டியில் போட்ட நிலையில் பாஸ்போர்ட் மற்றும் துப்பாக்கியும் அதில் போட்டது விசாரணையில் தெரிந்தது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பை தொட்டியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்