பிரபல ஓட்டலில் பரிமாறிய சாம்பார் இட்லியில் புழு இருந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலையில் உள்ள ஓட்டலில் பரிமாறப்பட்ட சாம்பார் இட்லியில் புழு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-17 17:57 GMT

திருவண்ணாமலையில் உள்ள ஓட்டலில் பரிமாறப்பட்ட சாம்பார் இட்லியில் புழு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள பிரபல ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

சுமார் 8 மணியளவில் ஓட்டலுக்கு 2 பேர் சாப்பிட வந்தனர். அவர்கள் சாம்பார் இட்லி ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் சாப்பிட்ட சாம்பார் இட்லியில் புழு ஒன்று கிடந்து உள்ளது. இதைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அது குறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டு உள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் ஓட்டலுக்கு விரைந்து வந்தனர். சாம்பார் இட்லி வாங்கி சாப்பிட்ட இருவரிமும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் சம்பந்தப்பட்ட எழில்சிக்கையராஜா மற்றும் இளங்கோ ஆகியோர் ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்தனர்.அவர்கள் ஓட்டலின் சமையல் கூடம், உணவு தயாரிக்கும் இடம், காய்கறிகள் பயன்படுத்தக்கூடிய இடங்கள், குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''சமூக வலைதளத்தில் பரவிய தகவலின் அடிப்படையில் ஓட்டலில் ஆய்வு செய்யப்பட்டது. குற்றம் சொல்லும் அளவில் சமையல் அறையில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

காய்கறிகள் மூலம் சாம்பாரில் புழு வந்ததா? என்று காய்கறிகள் சிலவற்றை வெட்டி பார்த்தோம். அதன்பின் ஓட்டல் ஊழியர்களிடம், ''சமையல் அறையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். உணவகத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் கையுறைகளை பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு உணவை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினோம்'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்