பெண்ணாடம் அருகே சாலை விரிவாக்கத்திற்காக 3 பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
பெண்ணாடம் அருகே சாலை விரிவாக்கத்திற்காக 3 பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.
பெண்ணாடம்,
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து பெண்ணாடம் வழியாக திட்டக்குடி வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்காக நந்தபாடி, துறையூர், பெ.பொன்னேரி ஆகிய இடங்களில் உள்ள பயணிகள் நிழற்குடையை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி துறையூர் பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றுவதற்காக நேற்று நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து நிழற்குடையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகதீஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து நந்தபாடி, துறையூர், பெ.பொன்னேரி ஆகிய இடங்களில் இருந்த பயணிகள் நிழற்குடை அடுத்தடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.