தீக்குளிக்க வந்த 2 பெண்களால் பரபரப்பு

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த 2 பெண்கள் தீக்குளிக்க மண்எண்ணெய் கொண்டு வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-10 19:45 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கற்பகம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த 2 பெண்கள் கட்டை பையில் மறைத்து வைத்து பாட்டிலில் மண்எண்ணெய் கொண்டு வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய்யை கைப்பற்றினர். பின்னர் போலீசார் அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், எதற்காக மண்எண்ணெய் கொண்டு வந்தார்கள்? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பூர்வீக நிலம் ஆக்கிரமிப்பு

விசாரணையில் அவர்கள் குன்னம் தாலுகா, பேரளியை சேர்ந்த பச்சமுத்து மனைவி மீனாம்மாள் (வயது 69), பச்சமுத்துவின் தம்பியான கைப்பிள்ளை என்ற துரைசாமியின் மனைவி செல்வமணி (53) என்பது தெரியவந்தது. அவர்களுடைய பூர்வீக குடியிருப்பு நிலத்தை அதே பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து, வருவாய் துறையினரின் உதவியோடு அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ததாகவும், அந்த நிலத்தை தங்களது பெயர்களுக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி குன்னம் தாசில்தாரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.

விசாரணை

இதனால் மீனாம்மாளும், செல்வமணியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் இது தொடர்பான மனுவினை அளித்து விட்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் போலீசாரும், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்