அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு
அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மாலை நேரத்தில் மாங்கோட்டை, செம்பட்டிவிடுதி, வாராப்பூர், மழையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லை என குற்றச்சாட்டு பல நாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது போதுமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளி மாணவர்கள் ஏ 4-ம் எண் கொண்ட அரசு பஸ்சில் மட்டுமே பயணித்து வருகின்றனர். இதேபோல இன்றும் மாணவர்கள் மற்ற பஸ்களில் ஏறாமல் ஏ 4-ம் எண் பஸ்சில் மட்டுமே ஏறினர். பஸ்சில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பஸ் மிகவும் சாய்ந்த நிலையில் பயணித்தபோது, மாணவர்கள் பஸ்சில் படிக்கட்டு மற்றும் பின்புறம் உள்ள ஏணி ஆகியவற்றில் தொங்கியவாறு பயணித்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனை அருகே வந்தபோது, அந்த பஸ்சை சிறைபிடித்தனர். அப்போது பொதுமக்கள், டிரைவரிடம் இப்படி மாணவர்களை ஏற்றி சென்றால் பெரிய அளவில் விபரீதம் ஏற்பட்டால் என்ன ஆகும் என்று கேட்டனர். இதையடுத்து பஸ்சில் மாணவர்கள் இப்படி தொங்கியவாறு பயணித்தால் நான் பஸ்சை இயக்க மாட்டேன் என கூறி டிரைவர் பஸ்சை இயக்க மறுத்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரெத்தினகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவர்களை எச்சரித்து மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பஸ்சை டிரைவர் எடுத்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.