இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்ய சென்றதால் பரபரப்பு

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்ய சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-27 18:03 GMT

விபத்தில் சாவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் அப்துல்பாரி முஸ்த்தரிபேகம். இவரது மகன் பஷீர். இவர் வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி இரவு வாணியம்பாடியில் இருந்து பேரணாம்பட்டுக்கு காரில் வந்துள்ளார். உமராபாத் அடுத்த புத்தூர் அருகே வந்தபோது குறுக்கே நாய் வந்துள்ளது. நாய் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பியபோது சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் கார்மோதியது. இதில் பஷீர் பரிதாபமாக இறந்து விட்டார்.

அதைத்தொடர்ந்து குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் பஷீரின் பெற்றோர்கள் அப்துல்பாரி முஸ்த்தரிபேகம் மற்றும் அவரது குடும்பத்தினர் இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.

இழப்பீடு வழங்க உத்தரவு

இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஷீர் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.9 லட்சத்து 92 ஆயிரத்து 200-ஐ, 7½ சதவீத வட்டியுடன் வழங்குமாறு குடியாத்தம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை. இதனையடுத்து 2020-ம் ஆண்டு நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து வட்டியுடன் சேர்த்து ரூ.13 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. அப்போதும் இழப்பீடு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் வழக்கறிஞர் கே.லோகநாதன் மூலமாக நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் இழப்பீடு தொகையாக வட்டியுடன் ரூ.16 லட்சத்து 59 ஆயிரத்து 892 வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு சார்பு நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார். ஆனாலும் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை.

ஜப்தி செய்ய...

அதைத்தொடர்ந்து குடியாத்தம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்ய குடியாத்தம் சார்பு நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று குடியாத்தம் சார்பு நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்கள் தங்கராஜ், பிரேமலதா மற்றும் விபத்தில் பலியான பஷிரீன் பெற்றோர்கள் வழக்கறிஞர் மூலமாக குடியாத்தம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர். அப்போது இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்