நாமக்கல் அருகே உள்ள செங்காளிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள குட்டையை சிலர் ஆக்கிரமித்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதனை அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பினர் கருப்பண்ணன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் குட்டையை ஆக்கிரமித்த நபர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், புகார் தெரிவித்த தங்களது குடும்பத்தாரிடம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி சுதந்திர தினமான நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பண்ணன் தனது குடும்பத்தாருடன் தீக்குளிக்க போவதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சுதந்திர தினமான நேற்று அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க போலீசார் கருப்பண்ணன் வீட்டிற்கே சென்று அவரை கைது செய்ய முயற்சி செய்தனர். இதனையடுத்து கருப்பண்ணன், அவரது மனைவி ராமாயி, கார்த்திக் ஆகியோர் செங்காளிகவுண்டனூர் பகுதியில் தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து உடலில் தண்ணீரை ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.