மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்களிடம் எழுச்சி வர வேண்டும் - சீமான்
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்களிடம் எழுச்சி வர வேண்டும் என்று ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
2 நாட்கள் சுற்று பயணம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஈரோட்டுக்கு வந்தார். ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து கீழ்பவானி விவசாயிகளையும் சந்தித்து பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால், நானும் போட்டியிடுவேன். இல்லையென்றால் சட்டமன்ற தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன். இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. வளரும் நாடுகள் பட்டியலிலேயே இந்தியா கிடையாது. 2 கோடிக்கு பேருக்கு கடந்த 10 ஆண்டுகளாக வேலை வழங்கவில்லை.
நீட் தோ்வு
தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 80 முதல் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக கூறி வருகிறார்கள். அதில் 8 சதவீதத்தை சொல்லுங்கள் என்றால், கூறமுடியவில்லை. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார்கள். எதுவுமே இல்லாதவர்கள் மற்றும் கட்சிக்காரராக இருந்தால் மட்டுமே கொடுப்பார்கள் போல.
நீட் தேர்வு முறையை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். அப்போது கூட்டணியில் இருந்தது தி.மு.க. ஆனால் பெரும்பான்மையை பயன்படுத்தி அதை செயல்படுத்தியது பா.ஜ.க. நீட் தேர்வால் எந்த தகுதியும் அதிகரித்து விடாது. நாம் தமிழர் கட்சி எந்த தேர்தலிலும் கூட்டணி வைக்காது. நடிகர் விஜய் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம். என் கொள்கை முடிவு தனித்து நிற்பதுதான்.
காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கட்சிகளுடன் எதற்காக கூட்டணி வைக்க வேண்டும் என்று தி.மு.க.வினரிடம் கேள்வி கேட்க வேண்டும். அ.தி.மு.க.வை சேர்ந்த 6 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ.யில் வழக்கு உள்ளது.
இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து
5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கர்நாடக தேர்தலைபோலவே பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டால், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் நடத்த வாய்ப்பு இருக்கிறது.
நாடு முழுவதும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பலை உள்ளது. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்களிடம் எழுச்சி வர வேண்டும். இந்தியா கூட்டணி சாதனை படைக்குமா? என்று கேட்டால், சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு சீமான் கூறினார்.