முத்துமனோ கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்-சிறைக்காவலர், மதுரை ஐகோர்ட்டில் திடீர் வழக்கு

பாளையங்கோட்டை சிறையில் கைதிகளால் நடந்த முத்துமனோ கொலைக்கு நீதி விசாரணை கோரி, அந்த சிறையில் காவலராக பணியாற்றியவர் மதுரை ஐகோர்ட்டில் திடீரென வழக்கு தாக்கல் செய்துள்ளார்..

Update: 2022-07-22 20:35 GMT

பாளையங்கோட்டை சிறையில் கைதிகளால் நடந்த முத்துமனோ கொலைக்கு நீதி விசாரணை கோரி, அந்த சிறையில் காவலராக பணியாற்றியவர் மதுரை ஐகோர்ட்டில் திடீரென வழக்கு தாக்கல் செய்துள்ளார்..

சிறையில் கைதி கொலை

தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் பகுதியை சேர்ந்த வடிவேல் முருகையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் தற்போது சேலம் சிறையில் முதன்ைம தலைமை காவலராக பணியாற்றி வருகிறேன். இதற்கு முன்பு பாளையங்கோட்டை சிறையில் வேலை செய்தேன்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி சிறையில் வார்டு ஏ-ன் பாதுகாப்பு அதிகாரியாக பணியில் இருந்தேன். அன்று மதியம் சாப்பிடுவதற்காக வெளியில் சென்றேன்.

அந்த நேரத்தில்தான், கொலை வழக்கில் கைதான முத்துமனோ என்பவர் பாளையங்கோட்டை சிறையில் அனுமதிக்கப்பட்டு அங்குள்ள வார்டு ஏ-ல் அடைக்கப்பட்டார்..

சிறிது நேரத்தில் ஏற்கனவே அங்கிருந்த கைதிகள், அவரை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டார். வார்டு ஏ-ல் இருந்த ஜாக்கப் என்ற பிளாக் ஜாக்குவார் என்பவரின் அண்ணன் கொலையில் முத்துமனோவுக்கு தொடர்பு இருந்துள்ளது. இதனால்தான் அவர் தாக்கப்பட்டார். இந்த தகவல் ஏற்கனவே சிறை அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும், அவரை அதே வார்டில் அனுமதித்தது சிறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை காட்டுகிறது.

பலிகடா ஆக்கிவிட்டனர்

இந்த விவகாரத்தில் என்னையும், சண்முகசுந்தரம், சிவன், கங்காராஜன், ஆனந்தராஜ், சங்கரசுப்பு ஆகியோரையும் பணியிடை நீக்கம் செய்தனர். சுமார் 8 மாதங்கள் கழித்து, அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, சேலம் சிறைக்கு மாற்றப்பட்டேன். மேலும் என் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முத்துமனோவை கொலை செய்ய கைதிகள் திட்டமிட்டு இருப்பது ஏற்கனவே சிறையின் முக்கிய அதிகாரிகளுக்கு உளவுத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவருக்கான போதிய பாதுகாப்பை அளிக்க சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் தவறை மறைக்க, எங்களை பலிகடா ஆக்கிவிட்டனர்.

முத்து மனோ கொலை குறித்து பாளையங்கோட்டை சிறையில் நடைபெறும் விசாரணை முறையாக நடக்கவில்லை.

நீதி விசாரணை

எனவே என்னை பணியிடை நீக்கம் செய்ததற்கு காரணமாக இருந்த அப்போதைய பாளையங்கோட்டை சிறையின் சூப்பிரண்டு, அவரது சம்பளத்தில் இருந்து எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும் முத்துமனோ கொலை குறித்து மாநில அரசுத்துறை செயலாளர் தகுதியுள்ள அதிகாரி தலைமையிலோ அல்லது ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

சிறைத்துறை தலைவருக்கு உத்தரவு

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்தத்துறை தலைவர் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

======

Tags:    

மேலும் செய்திகள்