குமரியில் உரத் தட்டுப்பாடு நிலவுகிறது;குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

குமரி மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

Update: 2022-07-21 18:25 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். ேவளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) அவ்வை மீனாட்சி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் வசந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் மழை அளவு, அணைகளில் நீர் இருப்பு, தென்னை மரக்கன்றுகள் இருப்பு உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. இதை தொடர்ந்து கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் பேசியபோது கூறியதாவது:-

உரம் தட்டுப்பாடு

கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 19 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அது எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிதி போதுமானதாக இல்லை. பறக்கை, புத்தளம் உள்ளிட்ட இடங்களில் உரம் தட்டுப்பாடு உள்ளது. எனவே உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேயன்குழி பகுதியில் ரெயில்வே தண்டவாள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரதான கால்வாய் கரைகளில் உள்ள செடி, கொடிகள் அகற்றப்படுவது இல்லை. அங்கு ஆமணக்கு தோட்டம் போட்டுள்ளார்கள். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மலைகளை உடைப்பதால் விளை நிலங்கள் சேதம் அடைகிறது. மலை வளமும் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் பதில்

இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் இந்த மாதம் இயல்பான மழையை காட்டிலும் குறைவான அளவே மழை பெய்துள்ளது. இதுவரை 52.31 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விவசாயிகளுக்கு தற்போது தேக்கு தவிர்த்து 21 வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 19 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு நிலங்களை பசுமையாக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தரிசு நிலங்கள் அதிகமாக உள்ள கிராமங்களை முதற்கட்டமாக தேர்ந்தெடுத்து உள்ளோம். நடப்பு ஆண்டில் 20 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் அனைத்து கிராமங்களும் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு நிதியும் அதிகளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பசுமையாக்கப்படும். குமரி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 400 டன் உரம் இருப்பு உள்ளது. எனவே உரம் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். கால்வாய் கரைகளில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கல்குவாரி குத்தகை உரிமம் வழங்கப்படவில்லை. பேயன்குழியில் ரெயில்வே தண்டவாள பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிவடைந்து விடும். இதைத் தொடர்ந்து கால்வாய் சீரமைப்பு பணிகள் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் தொடங்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

விவசாய பிரதிநிதிகள்

கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, பத்மதாஸ், வின்ஸ் ஆன்றோ, பெரிய நாடார், செண்பகசேகர பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்