சார் பதிவாளர் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லை

வாடகை கட்டிடத்தில் இயங்கும் சார் பதிவாளர் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Update: 2022-11-10 18:45 GMT

கோத்தகிரி

வாடகை கட்டிடத்தில் இயங்கும் சார் பதிவாளர் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சார் பதிவாளர் அலுவலகம்

கோத்தகிரி பகுதியில் கடந்த 1948-ம் ஆண்டு முதல் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மிஷன் காம்பவுண்ட் செல்லும் சாலையிலும், அதன்பிறகு கிளப் ரோடு பகுதியிலும் உள்ள தனியார் கட்டிடங்களில் வாடகைக்கு செயல்பட்டு வந்தது. தற்போது மீண்டும் மிஷன் காம்பவுண்ட் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் சார் பதிவாளர், தலைமை எழுத்தர், இளநிலை உதவியாளர், உதவியாளர் என 4 பேர் பணியில் உள்ளனர். மேலும் தனியார் நிறுவன கம்யூட்டர் ஆபரேட்டர்கள் 2 பேரும் பணியில் உள்ளனர். மாதத்திற்கு சராசரியாக 200 பத்திரபதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த அலுவலகத்தில் போதிய வசதிகள் இல்லை. இதனால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கழிப்பிட பிரச்சினை

கோத்தகிரி தின்னியூரை சேர்ந்த சிவராஜ்:-

கோத்தகிரி சார் பதிவாளர் அலுவலகம், அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் பத்திர பதிவிற்கு வரும் பொதுமக்களுக்கு போதிய இடவசதியின்றி குறுகலாக அமைந்துள்ளது. அலுவலகத்திற்கு வெளியே கழிப்பிடம் கட்டப்பட்டு இருப்பினும், முறையான தண்ணீர் வசதி இல்லை. மழைக்காலங்களில் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் ஒதுங்கி நிற்க கூட போதுமான இடவசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சார் பதிவாளர் அலுவலகத்தை இடவசதியுடன் கூடிய வேறு கட்டிடத்துக்கு மாற்றவோ அல்லது புதிய கட்டிடம் கட்டவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

போக்குவரத்து நெரிசல்

பத்திர எழுத்தர் ஜான் பெனிட்டோ:-

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து மிஷன்காம்பவுண்ட் வழியாக ஏராளமான குக்கிராமங்களுக்கு அரசு பஸ், தனியார் மினி பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சார் பதிவாளர் அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால், அங்குள்ள சாலையோரங்களில் பத்திர பதிவிற்கு வருவோரின் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய அலுவலகம் அமைக்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம்.

குண்டும், குழியுமான சாலை

பெத்தளாவை சேர்ந்த விஸ்வநாதன்:-

பத்திர பதிவு மேற்கொள்வதற்காக வரும் வயதானவர்கள் வெளியே வாகனங்களை நிறுத்திவிட்டு அலுவலகத்துக்கு நடந்து வருவது சிரமமாக உள்ளது. அலுவலகத்துக்குள் வாகனங்களில் வரும்போது, அங்குள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. கொரோனாவுக்கு பிறகுதான் ரியல் எஸ்டேட் தொழில் சற்று மேம்பட தொடங்கியுள்ளது. இதனால் தினந்தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் நிலங்களை வாங்கி பதிவு செய்ய வருகின்றனர். அரசுக்கு கணிசமான வருவாயை ஈட்டி தரும் இந்த துறை அலுவலகத்திற்கு போதிய வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை கட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

கோத்தகிரியைச் சேர்ந்த தேவராஜ்:-

தற்போது செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகம் ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அலுவலகத்துக்கு நடந்தோ அல்லது வாகனங்களிலோ தான் செல்ல வேண்டி உள்ளது. மேலும் முக்கிய சாலையில் இருந்து தாழ்வான பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள சாலையும் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே அலுவலகத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்.

(பாக்ஸ்)நிலம் ஒதுக்கினால் விரைவில் சொந்த கட்டிடம்

பத்திரப்பதிவு துறை அலுவலர்கள் கூறியதாவது:-

அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தை ராம்சந்த் சதுக்கம் அல்லது கீ ஸ்டோன் பகுதியில் உள்ள போதுமான வசதி கொண்ட வேறு வாடகை கட்டிடத்திற்கு மாற்ற கடந்த சில ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டோம். ஆனால் ஏற்ற கட்டிடம் அமையவில்லை. இதையடுத்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் சொந்த கட்டிடம் கட்ட முடிவு செய்து அதற்கான நிலத்தை பெறுவதற்கு வருவாய்த்துறையிடம் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள காலி இடத்தையும் அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்து சென்றுள்ளனர். அவ்வாறு நிலம் ஒதுக்கபட்டால், உடனடியாக அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய பத்திரப்பதிவு துறை தயாராக உள்ளது. எனவே விரைவில் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்