தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தனியார் ஆஸ்பத்திரியில் ஓரிரு நாட்களில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும், தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2022-07-10 23:21 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல்காலனியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வீடுகளில் தனிமை

தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசியை 94.68 சதவீதம் பேரும், 2-ம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேரும் போட்டுள்ளனர். தமிழக அளவில் போடப்பட்ட 2-ம் கட்ட தடுப்பூசி சதவீதத்தை காட்டிலும் தஞ்சை மாவட்டத்தில் அதிகஅளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீதி உள்ள 5 சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் உயிர் இழப்பை ஏற்படுத்தும் அளவில் இல்லை.

ஊரடங்கு தேவையில்லை

தமிழகத்தில் தடுப்பூசி காரணமாக மக்களிடையே 88 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 194 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ4, பிஏ5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக தற்போது 5 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதால் தற்போது ஊரடங்கு தேவையில்லை.

காலரா

தமிழகத்தில் விரைவில் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும். மருத்துவத்துறையில் சுகாதார செவிலியர்கள், களப்பணியாளர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 308 காலி பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பூஸ்டர் தடுப்பூசி இலவசம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா விராலூரில் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தற்போது, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளில் இன்னும் ஓரிரு நாட்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்து வருகிறோம்' என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்