ஆடு, சேவலுக்கு கடும் கிராக்கி

கோவில் திருவிழாவையொட்டி தீபாவளி பண்டிகை காலத்துக்கு இணையாக கிராமங்களில் ஆடு, சேவல் விற்பனை நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஆடு, கோழி வளர்ப்பவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

Update: 2023-04-12 19:00 GMT

தேனி மாவட்டத்தில் தற்போது எந்த பக்கம் பயணித்தாலும் ஒலிபெருக்கியில் பக்தி பாடல்களும், சினிமா பாடல்களும் ஒலிக்கின்றன. மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே திருவிழாக்கள் களைகட்டியுள்ளன.

கோவில் திருவிழாக்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் பங்குனி மாதத்தில், பங்குனி பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல், சித்திரை திருவிழாவும் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு வராவிட்டாலும், பங்குனி, சித்திரை மாதங்களில் நடக்கும் திருவிழாக்களில் பங்கேற்க வந்து விடுவார்கள். இதனால், ஒவ்வொரு கிராமங்களிலும் குடும்பங்கள், உறவினர்கள் சூழ்ந்து உற்சாகமாக திருவிழாக்களை கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டும் மாவட்டம் முழுவதும் பங்குனி பொங்கல் திருவிழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. தேனி கருவேல்நாயக்கன்பட்டி, காமாட்சிபுரம், பழனிசெட்டிபட்டி, ஊஞ்சாம்பட்டி உள்பட மாவட்டத்தில் பல இடங்களிலும் திருவிழா களை கட்டியது.

பந்தல் போடுபவர்கள், மைக் செட் அமைப்பாளர்களுக்கு தற்போது கடும் கிராக்கி நிலவுகிறது. முன்கூட்டியே முன்பணம் கொடுத்து தங்கள் ஊர் திருவிழாவுக்கு மைக் செட் அமைப்பாளர்களை அழைத்து வருகின்றனர்.

ஆடு, சேவலுக்கு கிராக்கி

முளைப்பாரி எடுத்தல், அக்னிச் சட்டி எடுத்தல், பால் குடம் எடுத்தல் என நேர்த்திக்கடன்கள் செலுத்தி மக்கள் திருவிழாக்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். திருவிழா நாட்களில் பூக்கள், சந்தனம், பன்னீர் வாசமும், திருவிழா முடிந்த மறுநாள் கறிக்குழம்பு வாசமும் கிராமங்களில் சற்று தூக்கலாகவே இருக்கிறது.

சில கோவில்களில் திருவிழா நாட்களிலேயே ஆடு, சேவல் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதனால், மாவட்டத்தில் ஆடு, சேவல் விற்பனை களைகட்டியுள்ளது. வெள்ளாடு, நாட்டுச்சேவல் தான் பெரும்பாலும் நேர்த்திக்கடன் செலுத்த பயன்படுத்தப்படுகிறது என்பதால், அவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் தங்களுக்கு தெரிந்த வியாபாரிகள் மூலமும், நேரடியாக கிராமங்களுக்கு சென்றும் ஆடு, சேவல்களை வாங்குகின்றனர். கிராமங்களுக்கு பக்தர்கள் படையெடுப்பதால் ஆடு, கோழி வளர்ப்பவர்களுக்கு நேரடி விற்பனை மூலம் நல்ல வருவாய் கிடைக்கிறது.

கருங்கிடாவுக்கு மவுசு

ஒரு சேவல் 2 முதல் 3 கிலோ எடை இருக்கிறது. ஒரு கிலோ ரூ.500 முதல் ரூ.550 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. 2 கிலோ எடை கொண்ட சேவல் ரூ.1000 முதல் ரூ.1,100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல், வெள்ளாட்டு கிடா ஒரு கிலோ ரூ.700 வீதமும் விலைபேசி வாங்கிச் செல்கின்றனர். 10 கிலோ எடைகொண்ட வெள்ளாட்டு கிடா ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே முழுவதும் கருப்பாக இருக்கும் கருங்கிடாவுக்கு இன்னும் மவுசு அதிகம். 1 கிலோ ரூ.800 வீதம், 10 கிலோ கொண்ட கிடா ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு இணையாக

தீபாவளி பண்டிகை காலத்துக்கு இணையாக கிராமங்களில் ஆடு, சேவல் விற்பனை நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஆடு, கோழி வளர்ப்பவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

குண்டல்நாயக்கன்பட்டியில் ஆடு வளர்க்கும் தொத்தையா கூறும்போது, 'நகரத்தில் இருப்பவர்களுக்கு கிராமங்களில் ஆடு வளர்ப்பு தொழில் என்பது சாதாரண தொழிலாக பார்க்கப்படுகிறது. ஆனால், அப்படி இல்லை. ஆண்டு முழுவதும் ஒருநாள் தவறாமல் ஆடுகளை பராமரிக்க வேண்டும். நேரத்துக்கு நீர், இரை வைக்க வேண்டும். மேய்ச்சலுக்கு வெளியே அழைத்துச் செல்லும் போதும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தீபாவளி, ஆடி போன்ற காலங்களில் ஆடு விற்பனை அமோகமாக இருக்கும். அதற்கு இணையாக பங்குனி, சித்திரை திருவிழா காலங்களிலும் இருக்கிறது. மற்ற நாட்களில் விற்பனை மந்தமாகவே இருக்கும். கருங்கிடாவுக்கு எப்போதும் தனிகிராக்கி இருந்து கொண்டு தான் இருக்கிறது. வியாபாரிகளுக்கு வழக்கமான விலை தெரியும். ஆனால், மக்கள் நேரடியாக வரும் போது பேரம் பேசி வாங்கிச் செல்கின்றனர். இருந்தாலும், விலை கட்டுப்படியாகும் நிலையில் தான் இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் ஆடு வளர்ப்பவர்களுக்கு இதுபோன்ற கால கட்டத்தில் நல்ல வருவாய் கிடைக்கும்' என்றார்.

மகிழ்வை கொடுக்கிறது

கடமலைக்குண்டுவில் ஆடுகள், நாட்டுக்கோழிகள் வளர்க்கும் பின்னத்தேவன் கூறுகையில், 'கோடை காலத்தில் ஆடுகளை பராமரிப்பது கடினமானது. தண்ணீர், இரை கிடைக்காத போது விலை கொடுத்து வாங்கிக் கொடுக்க வேண்டியது வரும். கோடை காலங்களில் வெளியே மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் போது அவற்றுக்கு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் நோய் தாக்கிய ஆடுகள் என்று வியாபாரிகள் வாங்க முன்வர மாட்டார்கள். எனவே, அதிக வெயில் காலத்தில் அவற்றை வெயிலில் அழைத்து செல்லாமல் கொட்டகையில் வைத்து பராமரிக்க வேண்டும். கோடை காலத்தில் மற்ற பயிர் சாகுபடியில் வருவாய் கிடைக்காத போதிலும், கால்நடை வளர்ப்பில் நல்ல வருவாய் கிடைக்கிறது. இது மகிழ்வை கொடுக்கிறது' என்றார்.

மன நிறைவு

உப்புக்கோட்டையை சேர்ந்த இறைச்சி வியாபாரி சின்னப்பாண்டி கூறுகையில், 'கிராமங்களில் திருவிழாவுக்கு காப்பு கட்டிய பிறகு மக்கள் விரதம் இருப்பார்கள். இதனால், இறைச்சி விற்பனை நடக்காது. இறைச்சிக் கடையை திருவிழா முடியும் வரை திறக்க மாட்டோம். அதே நேரத்தில் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் தங்களுக்கு தேவையான வெள்ளாடு, சேவல் போன்றவற்றை கேட்டு வருவார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை விவசாயிகளிடம் சென்று வாங்கி வந்து கொடுப்போம். அதில் அதிக லாபம் எதுவும் கிடைக்காது. ஆடுகளை வாங்கி இறைச்சியாக விற்பனை செய்தால், வருவாய் கிடைக்கும். உயிரோடு வாங்கி கை மாற்றி விடும்போது சில நூறு ரூபாய் தான் கிடைக்கும். இருந்தாலும் அதை மன நிறைவோடு செய்கிறோம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்