கல்லணை கால்வாயில் பிளாஸ்டிக்,குப்பை கழிவுகளால் தண்ணீர் தேங்கும் அபாயம்

மேற்பனைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கல்லணை கால்வாயில் வரும் தண்ணீரில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், தண்ணீர் பாட்டில்கள் தேங்கி தண்ணீர் அடைப்பு ஏற்படுவதால் தண்ணீர் தேங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2023-06-20 18:36 GMT

கல்லணை தண்ணீர்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகா பகுதிகளில் கல்லணை கால்வாய் மூலம் சுமார் 28 ஆயிரம் ஏக்கர் வரை பாசனம் செய்யப்படுகிறது. நேரடி பாசனம் மட்டுமின்றி ஏரி, குளங்களில் தண்ணீரை சேமித்து விவசாய பணிகள் நடக்கிறது. கல்லணையில் தண்ணீர் திறந்து சில நாட்கள் ஆன நிலையில் மேற்பனைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கிளை வாய்க்கால்கள் மூலம் ஏரி, குளங்களுக்கும் தண்ணீர் செல்கிறது.

மலைபோல தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

இந்த நிலையில் கல்லணை கால்வாய் தண்ணீரில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அதிகமாக மிதந்து வந்து கீழ்பாலங்களில் கீழே போகாமல் மலை போல குவிந்து மிதக்கின்றன.

கல்லணை கால்வாய் பணியாளர்கள் ஆங்காங்கே தேங்கும் கழிவுகளை அகற்றினாலும் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் தேங்கிவிடுகிறது. மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவில் அருகே உள்ள கீழ்பாலத்தில் மது பாட்டில்களும், தண்ணீர் பாட்டில்களும், குப்பை கழிவுகளும் மிதந்து தண்ணீர் செல்லும் மதகுகள் அடைக்கும் நிலையில் உள்ளது. இப்படி அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கினால் தண்ணீர் தேங்கி வேகம் குறையும் நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வது தாமதமாகிறது.

மதுபாட்டில்களை வீசி விட்டு...

இதுகுறித்து மேற்பனைக்காடு பகுதி விவசாயிகள் கூறுகையில், மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் மதுவும், பெட்டிக்கடைகளில் தண்ணீர் பாட்டில்கள், தின்பண்டங்கள் வாங்கி வந்து வயல் வரப்புகள், ஆற்றங்கரைகள், சாலைகளில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை விவசாய நிலத்திலும் ஆற்றுக்குள்ளும் வீசிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

இதனால் அவர்கள் வீசிவிட்டு செல்லும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் இங்கு மலை போல் தேங்கி விவசாயத்தை கெடுக்கிறது. வயலுக்குள் இறங்கினால் பாட்டில்கள் உடைந்து காலில் குத்துகிறது. அதே போல சாலைகளிலும் உடைத்து போடுகிறார்கள். இது போன்ற கழிவுகளை ஆறு, வயல், சாலைகளில் வீசுவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்