அழுகிய இறைச்சி கழிவுடன் பழுதாகி நின்ற லாரியால் பரபரப்பு

அழுகிய இறைச்சி கழிவுடன் பழுதாகி நின்ற லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-16 20:41 GMT

நாங்குநேரி:

நெல்லையில் இருந்து அழுகிய இறைச்சி கழிவுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. நாங்குநேரி அருகே உள்ள வாகைக்குளத்தில் சென்றபோது லாரி திடீரென பழுதாகி நின்றது. இதனால் மாற்று லாரி வரவழைக்கப்பட்டு அதில் கழிவுகளை ஏற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து அப்பகுதியில் பரவிய கடுமையான துர்நாற்றத்தால் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து யாரோ சிலர் சாலையோரம் கொட்டுவதாக தகவல் பரவியது.

இதனால் ஆத்திரமடைந்த வாகைக்குளம் கிராம பொதுமக்கள் அங்கு திரண்டு லாரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கழிவுகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடபோவதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்ததும் நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி சம்பவ இடத்திற்கு விரைந்தார். அப்போது ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்தினார். அதில் லாரி பழுது அடைந்ததால் மாற்று லாரியில் ஏற்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்ததை அடுத்து வேகமாக அங்கிருந்து கழிவுகளை அப்புறப்படுத்தி செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனை அடுத்து பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து போலீசார் கலைந்து போக செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்