விநாயகர் சிலை குடோனுக்கு சீல் வைப்பதாக பரபரப்பு
பாளையங்கோட்டையில் விநாயகர் சிலை குடோனுக்கு சீல் வைப்பதாக பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டையில் விநாயகர் சிலை குடோனுக்கு சீல் வைப்பதாக பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நெல்லை மாநகர் பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்து அமைப்புகள் குவிந்தனர்
வட மாநில தொழிலாளர்களால் பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு கிருபா நகர் பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான குடோன் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விநாயகர் சிலை செய்யும் கிருபா நகர் பகுதியில் உள்ள குடோன்களில் ஆய்விற்காக பல்வேறு மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று விநாயகர் சிலை குடோனுக்கு வருவாய் துறை சீல் வைக்க போவதாக தகவல் பரவியது. இதை அறிந்த இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். போலீசாரும் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
பரபரப்பு
ஏற்கனவே விநாயகர் சிலைகளை பெறுவதற்கு இந்து அமைப்பு நிர்வாகிகள், வட மாநில தொழிலாளர்களிடம் முன்பணம் கொடுத்துள்ள நிலையில் தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்கான பணிகளை தொடங்கினர். 10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் ஆட்டோ மற்றும் மினிலாரிகளில எடுத்து செல்லும் பணியை தொடங்கினர். வழக்கமாக விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் வந்து விநாயகர் சிலைகளை இந்து அமைப்பு நிர்வாகிகள் வட மாநில தொழிலாளர்களிடமிருந்து பெறுவது வழக்கம். ஆனால் போலீசார் கெடுபிடியால் குறிப்பிட்டு நாளுக்கு முன்னதாகவே விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.