வரைவு பட்டியல் வெளியீடு:மாவட்டத்தில் 1,627 வாக்குச்சாவடிகள்

நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட கலெக்டர் உமா, 1,627 வாக்குச்சாவடிகள் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

Update: 2023-08-23 18:45 GMT

வரைவு பட்டியல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா, வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியலை அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, 6 லட்சத்து 95 ஆயிரத்து 695 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 39 ஆயிரத்து 311 பெண் வாக்காளர்கள், 192 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14 லட்சத்து 35 ஆயிரத்து 198 வாக்காளர்கள்உள்ளனர்.

வழிமுறைகள்

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024-க்கான கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது. அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி வரைவு வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டு, 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், பெயர், வயது, முகவரி திருத்தங்கள் மேற்கொள்ளவும் தெரிவித்து உள்ளது.

இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி மேற்கொள்வதற்கு முன்பு வாக்குச்சாவடிகள் வரையறை பணி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளது. இதற்காக 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைத்தல், வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் சேதமடைந்த பழைய கட்டிடத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை அதே வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றுதல், வாக்குச்சாவடி பெயர் மாற்றம், 2 கி.மீட்டருக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துஉள்ளது.

1,627 வாக்குச்சாவடிகள்

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் நேற்று வெளியிட்டுள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியலின்படி ராசிபுரம் (எஸ்.சி.,) -260, -சேந்தமங்கலம் (எஸ்.டி.,) -284, -நாமக்கல் -289, -பரமத்திவேலூர்- 254, -திருச்செங்கோடு -261, குமாரபாளையம்-279 என மொத்தம் 1,627 வாக்குச்சாவடிகள்உள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்படி, வாக்குச்சாவடிகள் பிரித்தல், இணைத்தல், பெயர் மாறுதல் போன்றவைகள் தொடர்பான கோரிக்கைகள் இருந்தால், நாமக்கல், திருச்செங்கோடு வாக்குப்பதிவு அலுவலர்களிடம் எழுத்துபூர்வமாக தெரிவிக்கலாம். அதன் தொடர்ச்சியாக வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாதவன், உதவி கலெக்டர் சரவணன், தாசில்தார்கள், அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்