திருப்பரங்குன்றத்தில் பால்குடம் சுமந்துவரும் பக்தர்களுக்கு ``தென்னைநார் விரிப்பான்'' வசதி - வெயிலில் கால்கள் பாதிக்காமல் இருக்க ஏற்பாடு
திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவில் பால் குடங்கள், காவடி சுமந்துவரும் பக்தர்களுக்கு வெயிலால் கால்களின் பாதம் சுடமால் இருப்பதற்காக இந்த ஆண்டில் முதல்முறையாக "தென்னைநார் விரிப்பான் வசதி" செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவில் பால் குடங்கள், காவடி சுமந்துவரும் பக்தர்களுக்கு வெயிலால் கால்களின் பாதம் சுடமால் இருப்பதற்காக இந்த ஆண்டில் முதல்முறையாக "தென்னைநார் விரிப்பான் வசதி" செய்யப்பட்டுள்ளது.
விசாக திருவிழா
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 24-ந் தேதி காப்புகட்டுதலுடன் வைகாசி விசாகத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி கடந்த 8 நாட்களாக தினமும் இரவு 7 மணியளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக விசாக விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி மதுரை நகர் பகுதியில் இருந்தும், திருப்பரங்குன்றத்தை சுற்றில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்தும், மயில்காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி, பறவை காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துகிறார்கள்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சண்முகர் சன்னதியில் இருந்து விசாக கொறடு மண்டபத்திற்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமான் இடம் பெயருகிறார். இதனையடுத்து அதிகாலை 5.30 மணியிலிருந்து பக்தர்கள் நேர்த்திக்காக கொண்டு வரும் பாலை சண்முகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெறும். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை 3-ந்தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.
தென்னைநார் விரிப்பான் வசதி
விசாக திருவிழாவையொட்டி பால் குடங்கள், காவடிகள் எடுத்து வரும் பக்தர்கள் வெயிலின் தாக்கத்தால் தங்களது பாதம் சுடமால் கோவிலுக்குள் செல்வதற்கு வசதியாக இந்த ஆண்டு முதல் முறையாக கோவில் நிர்வாகத்தின் கீழ் ஒரு உபயதாரர் மூலமாக சோழவந்தானில் இருந்து தென்னைநார்கள் வரவழைக்கப்பட்டு கோவில் வாசலில் இருந்து சன்னதி தெரு நெடுகிலுமாக தென்னை நார் விரிப்பான் வசதி செய்யப்பட்டுள்ளது.