தேனி: கண்மாயில் மூழ்கி சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி - குளிக்க சென்ற போது பரிதாபம்...!
பெரியகுளம் அருகே கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு நிலக்கோட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளி லட்சுமணன், மூலச்சத்திரம் பகுதியை சேர்ந்த பாபு, மதுரையை சேர்ந்த பன்னீர்செல்வம் (25) ஆகியோர் தனது குடும்பத்துடன் கைலாசப்பட்டியில் உள்ள உறவினர் தர்மராஜ் வீட்டுக்கு இன்று வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை கைலாசப்பட்டி அருகே உள்ள பாப்பியன்பட்டி கண்மாயில் குளிப்பதற்காக பன்னீர்செல்வம், லட்சுமணன் மகன் மணிமாறன்(12), பாபு மகன் சபரிவாசன்(11) ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது கண்மாயில் குளித்து கொண்டிருந்த சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் தத்தளித்து உள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் தண்ணீரில் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் 3 பேரும் நீரில் முழ்கினர்.
இதனை அறிந்த அப்பகுதியினர் விரைந்து வந்து கண்மாயில் குதித்து 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் உயிரிழந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.