தேனி பெருந்திட்ட வளாகத்தில் மேற்கூரை பெயர்ந்து விழும் ஆபத்தான கட்டிடம்
தேனி பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. இதனால் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
பெருந்திட்ட வளாகம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பெருந்திட்ட வளாகம் உள்ளது. இங்கு ஒருங்கிணைந்த வளாகங்களாக 2 கட்டிடங்கள் உள்ளன. அதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், குழந்தைகள் நலக்குழு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் ஒரு கட்டிடத்திலும், முதன்மை கல்வி அலுவலகம், கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம், வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் மற்றொரு கட்டிடத்திலும் செயல்படுகின்றன.
இதில், வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படும் பெருந்திட்ட வளாக கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்து அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. சேதம் அடைந்த பகுதிகளில் கட்டுமான கான்கிரீட் கம்பிகள் துருபிடித்த நிலையில் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கின்றன.
பெயர்ந்து விழும் மேற்கூரை
முதல் தளத்தின் மேற்கூரை பெயர்ந்துள்ள பகுதிக்கு கீழே தரைத்தளத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், இங்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், இளம்பெண்கள் நூற்றுக்கணக்கில் தினமும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் நபர்கள் தரைத்தள வளாகத்தில் அமர்ந்து போட்டித் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால், பெயர்ந்து விழும் மேற்கூரையால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இதே நிலை நீடித்தால் கட்டிடம் வலுவிழந்து பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இதனால், இங்கு ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். எனவே, மழைக்காலத்தை கருத்தில் கொண்டு சேதம் அடைந்துள்ள கட்டிடத்தை போர்க்கால அடிப்படையில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.