தேனி பஸ் நிலையம், நிறுத்தங்களில்நிழற்குடை இல்லாததால் வெயிலில் காயும் பயணிகள்:கோடையை சமாளிக்க முடியாமல் பரிதவிப்பு
தேனி பஸ் நிலையம், நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாததால் வெயிலில் பயணிகள் காயும் நிலை உள்ளது.
தேனியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது. மார்ச் மாதமே சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கியது. ஏப்ரல் மாதம் தொடங்கிய நாள் முதல், தினமும் காலை நேரத்திலேயே சூரியன் உக்கிரமான பார்வையை பூமியின் மீது திருப்பி இருக்கிறது.
வெயிலின் தாக்கம்
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தொட்டுள்ளது. பகலில் உச்சியில் வெயில் அடிக்க உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டுகிறது. சாலையோர வியாபாரிகள் குடைக்கு கீழும், தலையில் துண்டை போட்டுக் கொண்டும் வியாபாரம் செய்கின்றனர். பாதசாரிகள் குடை பிடித்துக் கொண்டும், முக்காடு போட்டுக் கொண்டும் சென்று வருகின்றனர்.
தார்ச்சாலைகள் நெருப்பாக கொதிக்கிறது. இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, சாலையின் வெப்பம் முகத்தை பதம் பார்க்கிறது. இதனால் சரும நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்வதற்காக குளிர்பான கடைகள், சாலையோர கம்பங்கூழ், நீர்மோர் கடைகள், தர்ப்பூசணி, இளநீர், கரும்புச்சாறு விற்பனை கடைகளை தேடி மக்கள் செல்கின்றனர். கோடைக்கு இதமான பொருட்கள் விற்பனையும் களைகட்டியுள்ளது.
நிழற்குடை இல்லை
ஏப்ரல் மாதம் தொடக்கத்திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அடுத்து அக்னி நட்சத்திர வெயில் காலத்தை நினைத்தால், எரிமலை வெடிப்பது போல் மனதுக்குள்ளும் வெப்ப ஆறு ஓடுகிறது. வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் மக்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது.
குறிப்பாக தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிழற்குடை இல்லாமல் பஸ்சுக்காக மக்கள் வெயிலில் காயும் நிலை உருவாகி இருக்கிறது. மாவட்டத்தின் தலைநகராக திகழும் தேனியில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கிய வேகத்தில் முடங்கிக் கிடக்கிறது. அந்த பணியின் ஒரு பகுதியாக பஸ் நிலையத்துக்குள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதனால், வாய்க்கால் மேல் அமைக்கப்பட்ட நிழற்குடை அகற்றப்பட்டது. அதற்கு பின்னால் உள்ள இடத்தில் இருசக்கர வாகன காப்பகம் அமைந்துள்ளதால் மாற்று ஏற்பாடாக நிழற்குடை எதுவும் அமைக்கப்படவில்லை.
கலெக்டர் அலுவலகம்
தேனி பங்களாமேட்டில் சாலையின் இருபுறமும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. அதில் மதுரை செல்லும் சாலையில் இருந்த பயணிகள் நிழற்குடையில் சீரமைப்பு பணிக்காக மேற்கூரைகள் அகற்றப்பட்டன. தற்போது வெயிலில் காயும் திட்டு மட்டும் இருப்பதால் பயணிகள் வெயிலில் நின்றே பஸ்களில் பயணம் செய்கின்றனர். அதற்கு எதிரே 5 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த நிழற்குடை திறப்பு விழா இதுவரை நடத்தப்படாததால், அதுவும் காட்சிப் பொருளாகவே உள்ளது. நிழற்குடை திறக்கப்பட்டால் தான் அந்த இடம் பஸ் நிறுத்தமாக அங்கீகரிக்கப்படும் என்று கூறப்படுவதால், அங்கு பஸ்களும் நிற்பதில்லை. சுமார் 100 மீட்டர் தொலைவில் நிழற்குடை இல்லாத இடத்தில் பஸ்கள் நிறுத்தப்படுகிறது.
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பும், எதிரேயும் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளன. இதில் முன்புறம் உள்ள நிழற்குடை பயன்பாட்டில் உள்ளது. ஆனால் எதிரே அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை பயன்பாடு இன்றி உள்ளது. அந்த நிழற்குடையானது போஸ்டர் ஒட்டுவதற்கும், விளம்பரங்கள் செய்வதற்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சாலை அகலம் குறைவாக இருப்பதால் விபத்து அபாயம் உள்ளதால் அந்த நிழற்குடையை யாரும் பயன்படுத்துவது இல்லை. மக்கள் அனைவரும் சற்று தொலையில் நின்று பஸ்களில் ஏறிச் செல்கின்றனர். அவ்வாறு காத்திருக்கும் இடமும் வெயிலில் காயும் வகையில் தான் இருக்கிறது. பயன்பாடற்றும், விபத்து அபாயத்துடனும் உள்ள அந்த நிழற்கடையை அகற்றிவிட்டு, மக்கள் பயன்படுத்தும் பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது.
க.விலக்கில் பரிதவிப்பு
க.விலக்கில் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு ஆண்டிப்பட்டி, தேனி, கண்டமனூர், வைகை அணை ஆகிய 4 பகுதிகளுக்கு செல்லும் சாலையும் சந்திக்கும் இடத்தில் தேவர் சிலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை எதுவும் கிடையாது. இதனால் கண்டமனூர், தேக்கம்பட்டி, கடமலைக்குண்டு, வருசநாடு, வெள்ளிமலை, மயிலாடும்பாறை உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையோரம் உள்ள கடைகளின் முன்பும், வெயிலிலும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சில கிராமங்களுக்கு அடிக்கடி பஸ் வசதி கிடையாது என்பதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். அவ்வாறு காத்திருக்கும் மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். கடைகளின் முன்பு அதிக எண்ணிக்கையில் காத்திருக்கும் போது கடைகளின் வியாபாரம் பாதிக்கும். இதனால் ஒரு சில கடைக்காரர்கள் தங்களின் கடைகளின் முன்பு கூட்டம் சேர அனுமதிப்பது இல்லை.
ஏற்கனவே மக்கள் பரிதவித்து வரும் நிலையில், தற்போது கோடையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். தேவையான இடங்களில் நிழற்குடை அமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. கோடை காலம் தொடங்கி விட்டதால், தற்காலிக நிழற்பந்தல் வசதியாவது செய்து கொடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக பலதரப்பு மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
வெயிலில் காத்திருப்பு
உப்புக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன்:- உப்புக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், சிறுவியாபாரிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு தேனிக்கு வருகின்றனர். கடைவீதிகள், மொத்த விற்பனை கடைகள் எல்லாம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ளதால் பொருட்களை வாங்கிவிட்டு பழைய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஏற்கனவே இருந்த நிழற்குடையும் அகற்றப்பட்டதால் வெயிலில் நிற்க சிரமமாக உள்ளது. மீண்டும் நிழற்குடை அமைத்தால் தான் இந்த கோடையை சமாளிக்க முடியும். பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியும் இல்லை. எனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டக்கல்லூரி மாணவர் சசிக்குமார்:- தேனி பழைய பஸ் நிலையத்தில் நிழற்குடை இல்லாததால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். தற்போது 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருவதால் தேர்வு முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகளும் வெயிலில் காத்திருக்கின்றனர். பங்களாமேட்டிலும் அதே நிலைமை தான். பஸ் நிலையத்தில் குடிநீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை தான் உள்ளது. நிழற்குடை மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். சட்டக்கல்லூரிக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. எனவே கூடுதல் பஸ்களும் இயக்க வேண்டும்.
தற்காலிக பந்தல் அமைக்கலாம்
கண்டமனூரை சேர்ந்த குடும்பத்தலைவி அமுதா:- கண்டமனூர், கடமலைக்குண்டு உள்பட கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சை பெற தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்கின்றனர். ஆஸ்பத்திரிக்கு சென்று திரும்பி வருவதற்கு க.விலக்கில் பஸ்சுக்காக காத்திருக்கிறோம். நோயாளிகள், முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், கண்டமனூர் சாலையில் எதிர்காலத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும். தற்போது கோடையை சமாளிக்க தற்காலிக நிழற்பந்தல் அமைக்கலாம். அங்கு தண்ணீர் பந்தல் அமைத்தாலும் பயனுள்ளதாக இருக்கும்.
கடமலைக்குண்டுவை சேர்ந்த தங்கபாண்டியன்:- கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெயிலில் வெளியூர் சென்று வருவதே சிரமமாக உள்ளது. அதிலும் பஸ் பயணம் என்றால், நிழற்குடை இல்லாத பகுதிகளில் காத்திருப்பது என்பது தண்டனை போல் இருக்கிறது. க.விலக்கில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கை. ஆனால் நிழற்குடை அமைக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நீர்மோர் பந்தல் அமைப்பார்கள். இந்த ஆண்டு யாரும் அமைக்கவில்லை. பஸ் நிலையங்கள், முக்கிய பஸ் நிறுத்தங்களில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்தால் கூட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.