டாக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் திருட்டு
டாக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் திருட்டு போனது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் கனகராஜ் (வயது 72). இவர் அதே பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இங்கு 60 வயது மூதாட்டி ஒருவர் துப்புரவு வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சீட்டு பணம் ரூ.6 லட்சம் டாக்டர் வீட்டின் பின்பகுதியில் உள்ள தங்கும் அறை கட்டிலில் இருந்ததாக அந்த மூதாட்டி டாக்டரிடம் கூறியதாக தெரிகிறது. பின்னர் டாக்டர் அந்த பணத்தை எடுத்து பீரோவில் வைத்துள்ளார். இதையடுத்து 2 நாட்கள் கழித்து பீரோவில் உள்ள பணத்தை எடுக்க செல்லும் பொழுது பணம் திருட்டு போனதை கண்டு டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். பணத்தை அந்த மூதாட்டி தான் எடுத்து இருக்கலாம் என டாக்டர் கனகராஜ் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.