கன்னியர்மடத்தில் ரூ.45 ஆயிரம் திருட்டு
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் கன்னியர்மடத்தில் மர்ம நபர் புகுந்து ரூ.45 ஆயிரத்தை திருடி சென்றார். இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
ஆசாரிபள்ளம்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் கன்னியர்மடத்தில் மர்ம நபர் புகுந்து ரூ.45 ஆயிரத்தை திருடி சென்றார். இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
ரூ.45 ஆயிரம் திருட்டு
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வட்டகரை ஆர்.சி. சர்ச் சாலையில் கன்னியா்மடம் ஒன்று உள்ளது. அங்கு ஏராளமான கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் காலையில் கன்னியாஸ்திரிகள் மடத்தின் கதவை லேசாக சாத்திவிட்டு அருகே உள்ள ஒரு ஆலயத்துக்கு வழிபாடு செய்ய சென்றனர்.
பின்னர் அவர்கள் கன்னியர்மடத்திற்கு வந்தபோது, அங்குள்ள பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த ரூ.45 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கன்னியர்மடம் முழுவதும் பணத்தை தேடினர். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து பணம் திருட்டுபோனது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமராவில்..
இதுபற்றி ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு வாலிபர் கன்னியாஸ்திரிகள் வெளியே செல்வதை சற்று தூரத்தில் இருந்து நோட்டமிடுவதும், பின்னர் அவர் கன்னியர்மடத்துக்குள் சென்றுவிட்டு சிறிது நேரம் கடந்து வெளியே வருவதும் பதிவாகி இருந்தன. இதனால் அந்த வாலிபர்தான் பணத்தை திருடி சென்றதாக தெரிகிறது. மேலும், அந்த நபர் அதே பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதுதொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியர்மடத்தில் பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.