சேலம் அன்னதானப்பட்டியில் சிமெண்டு வியாபாரியிடம் ரூ.1¾ லட்சம் திருட்டு
சேலம் அன்னதானப்பட்டியில் சிமெண்டு வியாபாரியிடம் ரூ.1¾ லட்சத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அன்னதானப்பட்டி:
சேலம் லைன்மேடு பென்ஷன் லைன் பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (வயது 50). சிமெண்டு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் வியாபாரம் விஷயமாக ஒருவருக்கு கொடுக்க வேண்டிய ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்தை பையில் போட்டு தயார் நிலையில் வைத்து இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து வீட்டில் இருந்த குப்பைகளை கொட்ட தற்செயலாக பணத்தை சட்டை, பனியனுக்குள் போட்டபடி வெளியே வந்தவர், அன்னதானப்பட்டி 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் குப்பைகளை கொட்டி விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.
அங்கு சட்டை பனியனுக்குள் பார்த்த போது பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சம்பவ இடம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் பணம் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் அவர் குப்பை கொட்டும் போது நோட்டமிட்டு அவரது கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச்சென்றிருக்கலாம் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பழைய குற்ற வழக்குகளில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்தவர்களா?, அல்லது வேறு ஊரைச் சேர்ந்தவர்களா? என்பது குறித்து விவரம் ஏதும் தெரியவில்லை. இது குறித்த அவர் கொடுத்த புகாரின்பேரில், அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.