கார் கண்ணாடியை உடைத்து ரூ.1¼ லட்சம் திருட்டு
அன்னவாசல் அருேக கார் கண்ணாடியை உடைத்து ரூ.1¼ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓட்டல்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கிடகுளம் தெட்சிணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது 30). என்ஜினீயர். இவர் அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளை பார்க்க ஊரில் இருந்து காரில் மெய்வழிசாலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அன்னவாசல் பகுதியில் வந்த போது ராஜேஸ்குமார் தனது காரை அங்குள்ள ஓட்டல் முன்பு நிறுத்தி விட்டு உணவு சாப்பிட சென்றுள்ளதாக கூறப்படுகிறது
ரூ.1¼ லட்சம் திருட்டு
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் பக்க வாட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் காரின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது காருக்குள் இருந்த ரூ.1.30 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள காண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.