2 கடைகளில் பணம் திருட்டு
நாங்குநேரியில் ஒரே நாளில் 2 கடைகளில் பணம் திருட்டுப்போனது.
நாங்குநேரி:
நாங்குநேரியை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவர் அண்ணா சாலையில் பால் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் நேற்று முன்தினம் அவரது மனைவி லட்சுமி (வயது 62) இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், பால் பாக்கெட் மற்றும் ஐஸ்கிரீம் வேண்டும் என்று கேட்டு உள்ளார். அப்போது லட்சுமி பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, மர்மநபர் நைசாக அங்கிருந்து நழுவி சென்று விட்டார். பின்னர் லட்சுமி பணப்பெட்டியை பார்த்தபோது, ரூ.11 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. மர்மநபர் பொருட்கள் வாங்குவது போல் நடித்து பணத்தை திருடி சென்றதை அறிந்து லட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே கணபதி என்பவரின் டீக்கடையில் டீ குடிக்க வந்த மர்மநபரும், கணபதிக்கு தெரியாமல் கல்லாப்பெட்டியில் இருந்து ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இரு கடைகளிலும் ஒரே நபரே கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் மர்மநபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் நாங்குநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.