செல்போன் கடையில் பணம் திருட்டு; மேலும் 3 கடைகளில் கைவரிசைக்கு முயற்சி

செல்போன் கடையில் பணம் திருட்டு; மேலும் 3 கடைகளில் கைவரிசைக்கு முயற்சி

Update: 2022-12-15 21:19 GMT

செல்போன் கடையில் திருட்டு

திருச்சி சங்கிலியாண்டபுரம் மெயின்ரோட்டில் அரசமரத்தடி பஸ் நிறுத்தம் அருகே செல்போன் கடை நடத்தி வருபவர் நூர். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவுக்கு பின்னர் அவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.4 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றனர். கடையில் இருந்த செல்போன் உள்ளிட்ட மற்ற பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதேபோல் சங்கிலியாண்டபுரம் மெயின்ரோட்டில் உள்ள மற்ற 2 செல்போன் கடைகளின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆனால் நீண்டநேரம் முயன்றும் பூட்டை உடைக்க முடியாததால் தப்பி சென்றனர். இது குறித்த காட்சி அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை பார்வையிட்டு பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருட்டு முயற்சி

மேலும் திருச்சி வரகனேரி பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் சிராஜுதீன். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவுக்கு பின்னர் இவரது கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர். ஆனால் சத்தம் கேட்டு அந்த பகுதியினர் திரண்டதால் அவர்கள் தப்பி ஓடினர். இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் நள்ளிரவில் செல்போன் கடைகளை குறி வைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்ட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்