இரவு நேரங்களில் லாரிகளில் ஏரி மண் திருட்டு

வெம்பாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் லாரிகளில் ஏரி மண் திருடி செல்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-20 17:20 GMT

செய்யாறு

வெம்பாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் லாரிகளில் ஏரி மண் திருடி செல்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரி மண் திருட்டு

வெம்பாக்கம் தாலுகா சோதியம்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இரவில் அனுமதியின்றி மண் கடத்தப்படுவதாக நேற்று இரவு 7 மணிக்கு போலீஸ் அவசர உதவி எண்ணிற்கு தகவல் வந்தது.

இதையடுத்து தூசி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது மண் அள்ளிக்கொண்டிருந்த 5-க்கும் மேற்பட்ட லாரிகள் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது.

பின்னர் அங்கிருந்த நபர்கள் வருவாய்த்துறையினரிடம் அனுமதி பெற்றுத்தான் மண் அள்ளுகிறோம் என்று கூறி அதற்கான ஆதாரத்தை போலீசாரிடம் காட்டியதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம்

விதியை மீறி இரவில் மண் அள்ளுவது தவறு என போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் போலீசாரின் வாக்குவாதம் செய்துவிட்டு 2 பொக்லைன் எந்திரங்களை அங்கிருந்து எடுத்துச் செல்ல முடியாதபடி அதன் ஒயர்களை அறுத்து விட்டு சென்று விட்டனர்.

இதனால் இரவு முழுவதும் 2 போலீசார் விடிய, விடிய அந்த வாகனங்களுக்கு காவல் இருந்தனர். அதனைத்தொடர்ந்து இன்று காலை 9.30 மணியளவில் காவலுக்கு இருந்த 2 போலீசாரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

புகார் அளிக்கவில்லை

இதுகுறித்து செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் கூறுகையில், ஏரி மண் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் அங்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றிருப்பது தெரிய வந்ததும் போலீசார் திரும்பி வந்துவிட்டனர்.

விதி மீறி மண் அள்ளப்பட்டிருப்பது குறித்து வருவாய்த்துறையினர் புகார் அளித்தால் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிக்காததால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின்படி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விவசாயம், மண்பாண்டம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கென்று வண்டல் மண் எடுத்துச் செல்ல 13 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.

மரங்களை வெட்ட கூடாது

அதில் 1 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே வண்டல் மண் எடுக்க வேண்டும், வண்டல் படிவு முடிந்துவிட்டால் மண் எடுக்கும் பணியினை நிறுத்த வேண்டும், அதனை மீறி கிராவல் மண் எடுக்கக் கூடாது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மண் எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் மண் எடுக்கக் கூடாது. ஏரிக்குள் உள்ள மரங்களை வெட்டவோ அல்லது சேதப்படுத்தவோ கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால் மண் அள்ளப்பட்டுள்ள இடத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வேம்பு உள்ளிட்ட பெரிய, பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி அப்புறப்படுத்தி விட்டு கிராவல் மண் அள்ளப்பட்டிருக்கிறது. அதுவும் இரவு நேரங்களில் லாரிகளில் மண் அள்ளப்பட்டிருக்கிறது.

விவசாய பயன்பாட்டிற்கு என வண்டல் மண்ணுக்கு அனுமதி வாங்கிவிட்டு வழங்கப்பட்ட அளவைவிட அதிகமாக மண்ணை வாரி செங்கல் சூளைகளுக்கும், கட்டுமான பணிகளுக்கும் விற்பனை செய்யும் சமூகவிரோத செயலில் சிலர் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, வருவாய்த்துறையினர் மண் அள்ளுவதில் விதி மீறப்படுகிறதா என ஆய்வு செய்து விதி மீறப்பட்டிருப்பின் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்