2 கோவில்களில் நகை- உண்டியல் பணம் திருட்டு
2 கோவில்களில் நகை- உண்டியல் பணம் திருட்டு போனது.
துறையூர்:
நகை-பணம் திருட்டு
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த அம்மாபட்டி கிராமத்தில் செல்வ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்(60), அந்த கோவிலின் பூசாரியாக உள்ளார். அவர் தினமும் காலை, மாலை நேரங்களில் கோவிலை திறந்து பூஜை செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர், அவர் கோவிலை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் அவர் கோவிலை திறப்பதற்காக வந்தபோது, கோவிலின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கருவறையில் அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கப்பொட்டு, தாலி மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனடியாக இது பற்றி அவர் துறையூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
ஐம்பொன் சிலை தப்பியது
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அதே ஊரில் உள்ள நல்லம்மாள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும் அருகில் உள்ள காளிப்பட்டியில் நடுத்தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், கருவறை கதவின் பூட்டை உடைக்க முடியாததால் அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் அந்த கோவிலில் இருந்த நகைகளும், ஐம்பொன்னாலான உற்சவர் சிலையும் தப்பியது குறிப்பிடத்தக்கது.
திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.