நாகர்கோவிலில் தொழிலாளி வீட்டில் 4½ பவுன் நகை-பணம் திருட்டு

நாகர்கோவிலில் தொழிலாளி வீட்டில் 4½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-25 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் தொழிலாளி வீட்டில் 4½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மர்ம நபர்

நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோட்டை சேர்ந்தவர் முருகன், தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி (வயது 56). இவர் நேற்று முன்தினம் மாலை பக்கத்து தெருவில் சீட்டு பணம் கட்டுவதற்காக சென்றார்.

அப்போது வீட்டை பூட்டாமல் சென்றதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து வந்தபோது வீட்டின் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தியும், அவருடைய மகன் முகேசும், அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டில் இருந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், ஓட்டு வீட்டின் மேற்கூரை வழியாக ஏறி குதித்தார்.

நகை-பணம் திருட்டு

உடனே அந்த மர்ம நபரை அங்கிருந்தவர்கள் விரட்டி சென்றனர். அதற்குள் அவர் மின்னல் வேகத்தில் சென்று விட்டார். வீட்டுக்குள் இருந்த பொருட்களை சரி பார்த்த போது, மர்ம நபர், பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 4½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்திய சோபன், மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து மர்ம நபரின் ரேகையை பதிவு செய்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து, தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

-------

Tags:    

மேலும் செய்திகள்