கிடையில் அடைக்கப்பட்ட 34 ஆடுகள் திருட்டு
ஆவுடையார்கோவில் அருகே கிடையில் அடைக்கப்பட்டிருந்த 34 ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆவுடையார்கோவில்:
34 ஆடுகள் திருட்டு
ஆவுடையார்கோவில் அருகே ஆவணம் பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி-மதலைமேரி. இந்த தம்பதியினர் கடந்த 7 ஆண்டுகளாக செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். வழக்கம் போல் நேற்று ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டின் அருகே உள்ள கிடையில் 38 ஆடுகளை அடைத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு பார்த்த போது கிடையில் ஆடுகளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது 4 ஆடுகள் மட்டும் கிடைத்தன. மற்ற 34 ஆடுகளை மர்மநபர்களை திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து மீமிசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஆவணி மாதம் தொடங்கி திருமண வைபவங்கள் நடைபெற உள்ள நிலையில் விற்பனைக்கு வைத்திருந்த ஆடுகள் திருட்டு போனதால் இந்த தம்பதியினர் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆடுகளை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.