ஆசிரியையிடம் 3 பவுன் நகை திருட்டு
கோவையில் பஸ்சில் கூட்ட நெரிசலை பன்படுத்தி ஆசிரியையிடம் 3 பவுன் தங்க நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில் பஸ்சில் கூட்ட நெரிசலை பன்படுத்தி ஆசிரியையிடம் 3 பவுன் தங்க நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆசிரியை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கே.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகரன். இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 32). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் சம்பவத்தன்று தனது உறவினர்களுடன் நகை வாங்குவதற்காக கோவை வந்தார்.
பின்னர் அவர் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்று புதிதாக 3 பவுன் தங்க சங்கிலியை வாங்கினார். இதையடுத்து அவர் திருப்பூர் செல்வதற்காக உறவினர்களுடன் காந்திபுரம் செல்லும் டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
3 பவுன் நகை திருட்டு
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ அவரது பேக்கில் வைத்து இருந்த 3 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் ஆசிரியையின் நகையை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். புதியதாக வாங்கிய நகையை தனது கழுத்தில் போட்டு அழகு பார்ப்பதற்கு முன்பாகவே ஆசிரியை ஒருவர் நகையை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.