15 ஆடுகள் திருட்டு

திருவெண்ணெய்நல்லூர் அருகே 15 ஆடுகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-09-03 18:15 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கீழ்தணியாலம்பட்டு குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி குப்பு (வயது 60). இவர் 19 ஆடுகளை வளர்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வயல்வெளி பகுதிக்கு ஓட்டிச்சென்றார்.

பின்னர் மாலையில் வீட்டுக்கு ஓட்டி வந்து கொட்டகையில் ஆடுகளை கட்டி வைத்து விட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஆடுகள் சத்தம்போடுவதை கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குப்பு எழுந்து பார்த்தார். அப்போது மர்மநபர்கள் சிலர் குப்புவின் ஆடுகளை திருடி காரில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குப்பு திருடன், திருடன் என கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள், குப்புவின் 15 ஆடுகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். ஆடுகள் திருடுபோனதில் மனமுடைந்த குப்பு மீதமிருந்த 4 ஆடுகளை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

வலைவீச்சு

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதன் மூலம் ஆடுகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்