பூட்டிய வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
ராஜபாளையம் அருகே பூட்டிய வீட்டில் 10 பவுன் நகையை திருடி சென்றனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே பூட்டிய வீட்டில் 10 பவுன் நகையை திருடி சென்றனர்.
ஜன்னலில் வைத்த சாவி
ராஜபாளையம் அருகே உள்ள கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சூரியப்பிரகாஷ், முத்துராஜ், ஜெயக்குமார். சகோதரர்களான இவர்கள் 3 பேரும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருகின்றனர்.
சூரியப்பிரகாஷ் ஐதராபாத்திலும், ஜெயக்குமார் திருப்பூரிலும், முத்துராஜ் மத்திய தொழில் பாதுகாப்பு படையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் முத்துராஜ் விடுமுறையில் தற்போது ஊருக்கு வந்திருந்தார். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள மாதா கோவிலுக்கு சென்றனர். அப்போது அவர்கள் வீட்டை பூட்டி சாவியை வழக்கம் போல, வெளியே உள்ள ஜன்னலில் மறைத்து வைத்திருந்தனர்.
நகை திருட்டு
இதையடுத்து அவர்கள் வீடு திரும்பியதும் சூரியப்பிரகாஷ் வீட்டின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பீரோ சாவி இடம் மாறி இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் பீரோவை திறந்து பார்த்த போது, உள்ளே இருந்த 10 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சூரியப்பிரகாஷின் மனைவி ரோஜா ராணி அளித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.