ஆடு திருட்டு வழக்கில் வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே ஆடு திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 15 ஆடுகள் பறிமுதல், சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-06-15 17:34 GMT

திருத்துறைப்பூண்டி:-

திருத்துறைப்பூண்டி அருகே ஆடு திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 15 ஆடுகள் பறிமுதல், சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டன.

செம்மறி ஆடுகள்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள குறுந்தனி கிராமத்தை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் ரமேஷ் (வயது35). இவர் ஊர் ஊராக சென்று செம்மறி ஆடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமந்தூர் பகுதியில் பட்டி அமைத்து ஆடுகளை பட்டி மேய்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் அவருடைய பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 15-க்கும் மேற்பட்ட ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து அவர் ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வாகன சோதனை

அதன்பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வீர பரஞ்சோதி, பிரான்சிஸ் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி அருகே திருத்தங்கூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு வேனில் 15 செம்மறி ஆடுகள் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது. வேனை போலீசார் வழிமறித்து அதன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

ஆடுகள் பறிமுதல்

விசாரணையில் அவர் திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டான் புதுத்தெரு அண்ணாநகரை சேர்ந்த சித்திரவேல் மகன் ராஜபாண்டி (28) என்பதும், பாமந்தூர் பகுதியில் ரமேஷ் அமைத்திருந்த பட்டியில் இருந்து ஆடுகளை திருடிச்சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 15 ஆடுகள் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ராஜபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்