துணிக்கடை, பல் மருத்துவமனையில் பூட்டை உடைத்து திருட்டு

திருவண்ணாமலையில் துணிக்கடை, பல் மருத்துவமனையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2023-07-09 11:15 GMT

திருவண்ணாமலையில் துணிக்கடை, பல் மருத்துவமனையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

மர்ம நபர்கள் கைவரிசை

திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் அருகில் உள்ள துணிக்கடையை அதில் வேலை செய்யும் நபர்கள் நேற்று வியாபாரம் முடிந்த பின்னர் பூட்டி சென்றனர்.

தொடர்ந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் கடையில் இருந்த ரூ.18 ஆயிரம் மற்றும் சில துணிகளை திருடி சென்றனர்.

தொடர்ந்து மர்ம நபர்கள் துணிக்கடையின் அருகில் உள்ள பல் மருத்துவமனையிலும் கைவரிசையில் ஈடுபட்டனர். பல் மருத்துவமனையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.40 ஆயிரத்தை அவர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து இன்று காலை அக்கம்பக்கத்தினர் துணிக்கடை பணியாளர்களுக்கும் மற்றும் பல் மருத்துவமனையின் டாக்டருக்கும் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பின்னர் அவர்கள் கடை மற்றும் மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டு திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் திருட்டு நடைபெற்ற துணிக்கடை மற்றும் பல் மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்

திருவண்ணாமலை நகரில் தினமும் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்கள் சின்னக்கடை வீதி வழியாக தான் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

இதனால் எப்போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான சின்னக்கடை வீதியில் துணிக்கடை மற்றும் பல் மருத்துவமனையில் திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளதால் போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்