பாப்பிரெட்டிப்பட்டி அருகே வங்கி சுவரில் துளையிட்டு மர்ம கும்பல் கொள்ளை முயற்சி பணம், நகைகள் தப்பின
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வங்கி சுவரில் துளையிட்டு மர்ம கும்பல் கொள்ளை முயற்சி பணம், நகைகள் தப்பின
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வங்கி சுவரில் துளையிட்டு மர்ம கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளை முயற்சி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிபட்டியில் தமிழ்நாடு கிராம வங்கி கடந்த 2011-ம் ஆண்டு முதல் செல்வம் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடத்தின் மேல்தளத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களின் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வருகின்றனர். இந்த வங்கியில் மேலாளராக சுரேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வங்கி செயல்பாடு முடிந்தவுடன் பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வங்கியை திறந்து பணிகளை வங்கி அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து வங்கியின் நகை வைக்கப்பட்டுள்ள லாக்கரை திறக்கும் போது நகை மற்றும் பணம் வைக்கப்பட்ட ரகசிய அறையின் சுவரை மர்மநபர்கள் உடைத்தது தெரியவந்தது. உடனடியாக வங்கியில் உள்ள லாக்கரில் இருந்த நகைகள், பணத்தை அதிகாரிகள் கணக்கு பார்த்தபோது அனைத்தும் சரியாக இருந்தது. பின்னர் தான் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
விசாரணை
இதுகுறித்து உடனடியாக ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் வங்கி மேலாளர் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து தகவலறிந்த தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஸ்ரீ அபிநவ் மற்றும் அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மாலை வரை நீடித்த இந்த விசாரணையில் வங்கியிலிருந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யபட்டது. மேலும் மர்மநபர்கள் ரகசிய அறையில் துளை போட்டு அதனை பேப்பரால் மூடி வைத்து விட்டு மறுநாள் கொள்ளையில் ஈடுபட திட்டம் போட்டிருப்பது தெரியவந்தது. இதனால் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரம் பவுன் நகை, ரூ.20 லட்சம் தப்பியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.