விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள், பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள், பணம் திருட்டிய மர்ம நபர்களை போலீசாா் தேடி வருகின்றனா்.

Update: 2022-06-20 17:26 GMT


விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் நான்குமுனை சந்திப்பு அருகே உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இக்கடையில் விற்பனை முடிந்ததும் மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் அவர், கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கிருந்த கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த மதுபாட்டில் விற்பனையான பணம் ரூ.2 ஆயிரம் திருட்டு போயிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கடையின் பின்பக்க ஜன்னல் கதவின் கம்பிகள் அறுக்கப்பட்டிருந்ததை பார்த்து உடனே கடையில் இருந்த மதுபாட்டில்களின் இருப்பு எண்ணிக்கையை கணக்கு பார்த்தபோது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு போயிருந்தது. கடையின் ஜன்னல் கம்பியை அறுத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார், அந்த டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்