விழுப்புரத்தில் பேன்சி ஸ்டோரில் திருட்டு
விழுப்புரத்தில் பேன்சி ஸ்டோரில் திருடு போனது.
விழுப்புரம் மேல்தெருவை சேர்ந்தவர் சபரிநாதன் மனைவி தீபா(வயது 27). இவர் விழுப்புரம் வ.உ.சி.தெருவில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பேன்சி ஸ்டோரை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகள் திருட்டுப் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், பேன்சி ஸ்டோரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கவரிங் நகை, பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.