அந்தியூர் அருகே பெண் ஊராட்சி தலைவர் வீட்டில் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
அந்தியூர் அருகே பெண் ஊராட்சி தலைவர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே பெண் ஊராட்சி தலைவர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஊராட்சி தலைவர்
அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி தலைவராக இருப்பவர் சுமதி. இவருடைய கணவர் தவசியப்பன். அ.தி.மு.க. பிரமுகர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமதி, தவசியப்பன் ஆகியோர் தங்களது மகளுடன், தாங்கள் குடியிருக்கும் மாடி வீட்டை பூட்டிவிட்டு அருகே இருக்கும் தங்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தூங்க சென்றனர். இதனிடையே நேற்று காலை எழுந்ததும் தவசியப்பன் மாடி வீட்டுக்கு சென்றார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சி
பீரோவில் வைக்கப்பட்டு இருந்த கம்மல், கை சங்கிலி என 2 பவுன் நகைகளை காணவில்லை. இது குறித்து உடனே அவர் அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர்.
அதில் நேற்று முன்தினம் இரவில் மர்ம நபர்கள் 3 பேர் மோட்டார்சைக்கிளில் வருவதும், மோட்டார்சைக்கிளை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு அதில் ஒருவர் மட்டும் மாடி வீட்டுக்கு செல்வதும் பதிவாகி இருந்தது. இதனால் அவர்கள்தான் நகையை திருடிச்சென்றது என்பது தெரிந்தது.
வலைவீச்சு
இதையடுத்து ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த மாடி வீட்டில் இருந்து ரோடு வரைக்கும் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி தலைவர் வீட்டில் நகை திருடிச்சென்ற மர்ம நபர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.