ஈரோட்டில் துணிகரம்: பெண் தொழில் அதிபர் வீட்டில் 42 பவுன் நகை, ரூ.4½ லட்சம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஈரோட்டில் பெண் தொழில் அதிபர் வீட்டில் 42 பவுன் நகைகளையும், ரூ.4½ லட்சத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-03-15 20:39 GMT

ஈரோட்டில் பெண் தொழில் அதிபர் வீட்டில் 42 பவுன் நகைகளையும், ரூ.4½ லட்சத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெண் தொழில் அதிபர்

ஈரோடு பழையபாளையம் கீதா நகரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவருடைய மனைவி மஞ்சுளா தேவி (வயது 55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செந்தில்குமார் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மஞ்சுளாதேவி கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் தற்போது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்.

இதனால் மஞ்சுளா தேவி வீட்டில் தனியாக வசிக்கிறார். இவருடைய வீடு தரை தளம் மற்றும் முதல் மாடி கொண்டது. மஞ்சுளா தேவியின் தாய் அவ்வப்போது இவருடைய வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த 8-ந் தேதி மஞ்சுளா தேவியின் தாய் இவருடைய வீட்டுக்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அன்று இரவு மஞ்சுளா தேவி தனது தாயாரை பூந்துறையில் உள்ள அவரது வீட்டில் கொண்டு சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுவிட்டார்.

வைர நகைகள் கொள்ளை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மஞ்சுளா தேவி மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு சேதமடைந்து கிடந்தது. ஆனால் பூட்டு உடைக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர் முதல் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டுக்குள் பொருட்கள் அங்கும், இங்குமாக சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த லாக்கரும் (பாதுகாப்பு பெட்டகம்) உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 ஜோடி வைர கம்மல், ஒரு ஜோடி வைர வளையல், 4 வைர மோதிரங்கள், 7 ஜோடி தங்க கம்மல், 3 தங்க மோதிரம், 4 தங்க வளையல்கள், 3 தங்க பவள மாலை மற்றும் தங்ககாசு, நெக்லஸ் என மொத்தம் 42 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இது தவிர லாக்கரில் இருந்த ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் அள்ளிச்சென்றுவிட்டனர்,

வலைவீச்சு

இதுகுறித்து மஞ்சுளா தேவி உடனே ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

இதற்கிடையில் போலீசார் மஞ்சுளா தேவி வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அதில் 2 பேர் வீட்டுக்குள் நுழைவது பதிவாகி இருந்தது. ஆனால் அவர்களுடைய முகங்கள் சரியாக தெரியாததால் அடையாளம் காணமுடியவில்லை. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்