கோவில் திருவாச்சி திருட்டு; அர்ச்சகர் மகன் கைது

வேளாங்கண்ணி அருகே கோவில் திருவாச்சியை திருடியதாக அர்ச்சகரின் மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-20 19:15 GMT

வேளாங்கண்ணி அருகே கோவில் திருவாச்சியை திருடியதாக அர்ச்சகரின் மகன் கைது செய்யப்பட்டார்.

அபிமுக்தீஸ்வரர் கோவில்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குறிச்சியில் அந்தணப்பேட்டை அண்ணாமலை நாதர் கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட அபிமுக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அர்ச்சகராக குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் பணியாற்றி வருகிறார். கோவில் சேதம் அடைந்துள்ளதால் கோவிலுக்கு சொந்தமான பொருட்கள் பாதுகாப்பு கருதி அர்ச்சகர் ஹரிஹரன் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்ய அந்தணப்பேட்டை அண்ணாமலைநாதர் கோவில் கோவில் செயல் அலுவலர் சண்முகராஜ் என்பவர் அபிமுக்தீஸ்வரர் கோவில் கணக்காளர் ராதாகிருஷ்ணனை அனுப்பினார்.

திருவாச்சி திருட்டு

ஆய்வின்போது கோவிலுக்கு சொந்தமான செம்பினாலான ஒரு திருவாச்சியை காணவில்லை. இதுகுறித்து அண்ணாமலை நாதர் கோவில் செயல் அலுவலர் சண்முகராஜ் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஹரிஹரன் மகன் முத்துக்குமரன் (வயது27) என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் திருவாச்சியை திருடி, விற்பதற்கு தயாராக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து திருவாச்சியை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமரனை கைது செய்தனர். திருவாச்சியின் மதிப்பு சுமார் ரூ.14 ஆயிரம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்